Saturday, March 03, 2007

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த
உறவுக்குப் பெயரென்ன?
காதல்................... - அந்த
ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?
குடும்பம்...............

நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த
நிலைமையின் முடிவென்ன?
துயரம்............
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு
பெண்மையின் நிலை என்ன?
மௌனம்.........

Monday, February 19, 2007

நிலவே என்னிடம் நெருங்காதே - நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே - நீ
மயங்கும் வகையில் நான் இல்லை (நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம் - என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் - என்
பாதையில் இனிமேல் சுகம் வருமோ (நிலவே)

ஊமையின் கனவை யாரரிவார் - என்
உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
ஓடிய மேகம் கலையுமுன்னே - நீ
பாடி வந்தாயோ வெண்ணிலவே (நிலவே)

அமைதியில்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்
நிம்மதி இழந்தே நானலைந்தேன் - இந்த
நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான் (நிலவே)

Sunday, February 18, 2007

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்


ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் - அவன்
ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் (ஏதோ)

எதிலும் அச்சம், எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமை எனும்
பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ)

பெண்ணே தெய்வம், அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகளென்றும் பீடைகளென்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான் (ஏதோ)

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்,
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்;
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
காற்றாய் நெருப்பாய் நீராயிருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்;
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டுவிட்டான் (ஏதோ)

Friday, February 16, 2007

மயக்கமா? கலக்கமா?



மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)

Thursday, February 15, 2007

சிரிப்பு பாதி அழுகை பாதி



சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு)

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு)

உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோவில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் பேதம் இல்லை
இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும் (சிரிப்பு)

Wednesday, February 14, 2007

மனிதனென்பவன்


மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்

(மனிதனென்பவன்)

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

(மனிதனென்பவன்)

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்

(மனிதனென்பவன்)

Tuesday, February 13, 2007

யார் காவல்?


உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்

காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்? அவள்
மாலை அணிகின்ற உயிருக்கு
உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்? (உடலுக்கு)

சட்டம் என்பது வெளிக் காவல்
தர்மமென்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்?
எது காவல்? யார் காவல்? (உடலுக்கு)

மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்?
யார் காவல்? (உடலுக்கு)